ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கார்த்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.
தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, விஷால், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கார்த்தியும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2021, ஒரு படத்தின் தணிக்கைச் சான்றிதழை எந்த நேரத்திலும் நிராகரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இது அனைத்துப் படங்களின் வியாபாரத்தை பாதிப்பதோடு பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் திரைத் துறையையும் பாதிக்கிறது.
இதுபோன்ற முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். பைரசியைத் தடுப்பதற்கான சட்ட வரைவுகள் தேவைப்படும்போது நம்மைப் போன்ற நாகரிகமான சமூகத்தில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிப்பது தேவையற்றது. நமது வேண்டுகோளை ஏற்க அரசை வலியுறுத்துவோம்”.
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.