சென்னையில் கரோனா தொற்றால் ஒரே நாளில் 23 போலீஸார் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அனைத்து போலீஸாரும் தடுப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தி காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கடந்த 30-ம் தேதி சென்னையில் ஒரே நாளில் 23 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உதவி ஆய்வாளரின் மனைவி, பெண் உதவி ஆய்வாளரின் கணவர், பெண் காவலரின் தாய் ஆகிய 3 பேர் இறந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று நோய் அறிகுறியால் பரிசோதனைக்கு சென்றவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸார் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது ஓரளவு திருப்திகரமாக இருந்தபோதிலும், அதை முழுமையாக பின்பற்றாமல் இருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது.
போலீஸார் தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின்போதும், பொதுமக்களை சந்திக்கும் சமயங்களிலும் முகக்கவசம் அணிவதுடன், முக தடுப்புக் கவசமும் அணிந்து பணியாற்ற வேண்டும்.
நோய்த் தொற்று அறிகுறி ஏற்பட்ட உடன் பாதிப்புக்குள்ளானவர்கள் தாமாகவே மருத்துவமனைக்கு செல்லாமல், சில நாட்கள் தாமதம் செய்து மருத்துவமனைக்கு செல்கின்றனர். அந்த இடைப்பட்ட காலத்தில் நோய்த் தொற்று தீவிரமடைவதால், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்துவது மருத்துவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.
இதுபோன்ற நிகழ்விலிருந்து தற்காத்துக்கொள்ள, அறிகுறி தென்பட்ட உடன் காலதாமதமின்றி தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா தடுப்பு வழிமுறைகளை போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் காவல் ஆணையர் அறிவுறுத்திஉள்ளார்.