கோயம்பேடு காய்கறி சந்தை, வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) இயங்கும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுமக்களுக்கு காய்கறி தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும், விலை உயர்வைத் தடுக்க வேண்டும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தையை மூடினால், சனிக்கிழமையும், திங்கள்கிழமையும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை.இதை கருத்தில்கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கும்.

தடுப்பூசிக்கு ஏற்பாடு

18 வயதுக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும், கோயம்பேடு சந்தை வளாகத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.