தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிகா வைரஸ் மற்றும் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக, தமிழக – கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச்சாவடி பகுதியில் இன்று (ஜூலை 20) ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஜிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள், , வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசியை பொருத்தவரை சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது கோவைக்கு இதுவரை 10,97,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஜிகா வைரஸ் தாய்மார்களை பாதித்து வருகிறது. இன்று தமிழக – கேரள எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையோர கிராமப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேவைக்கேற்ப கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புப் பணியில் 21 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் 14,833 வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் தமிழகத்தில் யாருக்கும் கண்டறியப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கோவிட் தடுப்பூசி போடும் பணியை தொடங்க உள்ளோம். கோவையில் முதன் முறையாக தொடங்கப்பட உள்ளது. சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் மூலம், தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழம் முழுவதும் இத்திட்டம் தொடங்கப்படும்
தனியாருக்கு தடுப்பூசி முறைகேடாக விற்பனை செய்வது தொடர்பாக நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் மருத்துவமனைகளில் முழு வீச்சில் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளுடன் பேசி தடுப்பூசியை முழு அளவில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
1 கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது. 12 கோடி தடுப்பூசிகள் தமிழகத்துக்கு தேவைப்படும் நிலையில், இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் வேண்டும்.
தடுப்பூசி போடும் இடங்களில் கட்சி தலையீடு இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதுகுத் தண்டுவட தசை நார் சிதைவு நோய்க்கு என, அரசு சார்பில் தனியாக ட்ரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்”.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் சமீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.