உக்ரைன் போர் வலுத்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரஸ் டூடாவை சந்தித்து போர் நிலவரம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்கிறார். பெல்ஜியத்தில் நேட்டோ தலைவர்கள், ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்துவிட்டு அவர் போலந்து செல்கிறார். உக்ரைனில் ரஷ்ய தாக்குதலால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆலோசிக்கவிருக்கிறார். உக்ரைனுக்கான உலக நாடுகளின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமையும். ஆனால் உக்ரைனுக்கு செல்லும் திட்டம் ஏதுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக போலந்து பிரதமர் மடேசுஸ் மோராவெய்கி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனிய பிரதமர்கள் கீவ் நகருக்கே சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் வெள்ளிக்கிழமை போலந்து செல்லவிருக்கிறார். இதற்கிடையில், உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே சூப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.