தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, கடந்த 2018-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ஆக்சிஜன் உற்பத்தி:
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன,
எதிர்ப்பாளர்கள் ஆட்சேபம்:
இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரசீலனை செய்ய வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கக்கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தினமும் பல்வேறு தரப்பினர் மனு அளிக்க வருவதால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: என்.ராஜேஷ்
இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு கிராம மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
கண்டன கோலம், கறுப்புக் கொடி:
அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்திருப்பதை கண்டித்து ஏப்ரல் 29-ம் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படும். வீடுகளில் கறுப்புக் கொடிகள் கட்டப்படும். மேலும், வீடுகளுக்கு முன்பு கண்டன கோலங்கள் வரையப்படும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்கு முன்பாக ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என்ற வாசகத்தை கோலமாக வரைந்து வைத்திருந்தனர். மேலும், வீடுகள் மற்றும் தெருக்களில் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து இந்த கிராமத்தை போலீஸார் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை:
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் சுமார் 50 பேர் இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை கையிலேந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மெரினா பிரபு, மகேஷ், சுஜித், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கே.ரெங்கநாதன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி குரூஸ் திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்கனவே நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எங்களில் பலரை இழந்துள்ளோம். பலர் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடுங்காயம் அடைந்துள்ளனர். இந்த ஆலை நச்சு ஆலை எனக் கூறி தமிழக அரசே மூடியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கே ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என உண்மைக்கு புறம்பான பெய்யான தகவலை கூறி ஆலையை திறக்க உத்தரவு பெற்றுள்ளனர். இது எங்களை மிகவும் வேதனையடைய செய்துள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என வலியுறுத்தி வீடுகளுக்கு முன்பு வரையப்பட்டுள்ள கோலம். படம்: என்.ராஜேஷ்
ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோல இன்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் ஸ்டெர்லைட் வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.