10-ம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்வி சேர்க்கைக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்கள் பிளஸ் 1 படிக்கவும், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) சேருவதற்கும் மதிப்பெண் பட்டியல் அவசியமாகிறது.
2020-21-ம் கல்வியாண்டில் 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், அதற்கு முந்தைய ஆண்டில் 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வும்
நடத்தப்படவில்லை. இதனால் பிளஸ் 1 வகுப்பு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு மட்டும் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி 2019-20-ம் கல்விஆண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளில் பெற்றுள்ள அதிக மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். காலாண்டுமற்றும் அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை
புரியாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கலாம்.
அதேபோல், காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வுகளில் பங்கேற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இந்த விதிகளை முறையாகப் பின்பற்றி மதிப்பெண் பட்டியலை வழங்கி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். 10-ம்வகுப்பு படித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி சான்றிதழ் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.