பீஜிங்: சீனாவில் பள்ளி உடற்பயிற்சிக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் உள்பட 11 பேர் பலியாகினர்.
சீனாவின் வட கிழக்கு பகுதியில் ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கைப்பந்து அணியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 11 உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது உடற்பயிற்சிக் கூடத்தில் 19 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உடற்பயிற்சி கட்டிடத்தை கட்டிய உள்ளூர் கட்டிட நிறுவனத்தின் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவிகளின் உயிரிழப்பு காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு பெற்றோர்கள் கூடியதால் பதற்றம் எற்பட்டதாகவும் தெரிகிறது.
”பள்ளி நிர்வாகம் என் மகள் இறந்துவிட்டாள் என்று மட்டுமே கூறியது. அவளது உடலை காண்பிக்கவில்லை. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டக் குழந்தைகளின் முகத்தில் ரத்தம் படிந்திருந்தது” என்று பெற்றோர் ஒருவர் கண்ணீருடன் தனது துன்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கட்டுமான விபத்துகள் சீனாவில் பொதுவானவை. பாதுகாப்பு, தரக் குறைப்பாட்டினால் அங்கு இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம், வடமேற்கு சீனாவில் பார்பிக்யூ உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஊழியரின் கவனக்குறைவால் எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.