டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; விதிமுறைக்கு மாறாக பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்எல்சியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பினேன். ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து நெய்வேலி விவகாரம் குறித்து விவாதித்தேன். என்எல்சி விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து 4ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஒன்றிய அமைச்சர் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. என்எல்சியில் சேரும் தகுதி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கூட இல்லையா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, என்எல்சி தலைவர், நான் மூவரும் முதல்கட்டமாக பேச உள்ளோம். அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான தேர்வு தான் கிராஜிவேட் ஆட்டிடியூட் டெஸ்ட் நடத்தப்படுகிறது.

பொறியியல் பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். உயர் தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் கூறினார்.