39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரின் சாதனைகளை, சிந்தனைகளை, பொதுமக்கள் அறிந்துகொள்ள காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பரவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு கால திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி.

பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கருணாநிதி நின்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர். ஜனநாயகப் பாதையில் இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர். தோல்வி தொட்டதே இல்லை. வெற்றி கைவிட்டதும் இல்லை, அதுதான் கருணாநிதி.

இந்தியாவில் இவரைப் போல யாரும் இருந்ததில்லை என்ற வகையில் இருந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மகத்தான திட்டங்களை, சட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. நாம் வாழும் தமிழ்நாடு கருணாநிதிக்கு உருவாக்கிய தமிழ்நாடு. கனவு மாநிலத்தையே உருவாக்கியவர் கருணாநிதி.

நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், குடிசைகளை பற்றியே சிந்திப்பேன் என முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது கலைஞர் கூறினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், மகளிருக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சென்னை தரமணியில் டைடல் பார்க் என பல திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி” என்று புகழாரம் சூட்டினார்.