தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று முறையிடப்பட்டது.

ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில்மனுவில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார்.

மேலும், யார் கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர்களின் கையெழுத்து அங்கீகரிக்கப்படுவது என்பதுதான் விதி. அதன் அடிப்படையில் அதிமுகவின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆவணத்தில் இருக்கும் கையெழுத்து ஏற்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் விரிவான பதிலை உச்ச நீதிமன்றம் எதிர்பார்த்தால் அதனை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில்மனுவில், ‘பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கால அவகாசம் கருதி வேட்பாளர் தேர்வுக்கான வாக்குகளை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கடிதம் மூலம் பெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்