நிரம்பி வழிந்தனவிநாயகர் சதுர்த்தியையொட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று பயணம் மேற்கொண்டனர். நிண்ட நேரம் காத்திருந்தும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர், நீண்ட நேரம் காத்திருந்தும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பெரும்பாலான பேருந்துகளில் முன்பதிவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால், நேரில் வந்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் பலர் பல மணி நேரம் காத்திருப்பதாகக்கூறி வருத்தம் தெரிவித்தனர்.

இதேபோல, சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்தும், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். அதிக அளவில் மக்கள் கூடியதால், கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. தனியார் வாகனங்களும் அதிகளவில் அவ்வழியாக சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முயன்றதால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதால், பேருந்துகள் நிரம்பி வழிந்தன, இளைஞர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்ட நேரமாகியும் பேருந்துகள் கிடைக்காததால், பெண்கள் உட்பட பலர் ஆங்காங்கே சாலையோரம் நீண்டநேரம் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.