பிப் 26ம் தேதி சனிக்கிழமையன்று, 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (21-02-2022) சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகளே நடத்தும் நம்ம கபே சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

“மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் எப்படி மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாரோ, அதுபோல் ஆண்பாலை குறிக்கின்ற வகையில் ‘திரு’ என்பதையும், பெண்பாலை குறிக்கிற வகையில் நங்கை எனச் சேர்த்து ‘திருநங்கை’ எனப் பெயர் சூட்டி அந்த சமூகத்திற்கு பெரிய மரியாதையை உருவாக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய மக்கள் திருநங்கைகள் மீது அக்கறைக்கொள்கிற விசயத்தை முன்னெடுத்தார். முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துக்கொடுத்து அவர்களை தமிழகத்தில் சிறப்பித்து வருகிறார்.

குமரவேல் அவர்கள் திருநங்கைகளைப் பார்த்து அனுதாபப்படுவதை விடவும், இரக்கப்படுவதைவிடவும் அவர்களை தொழில் விற்பன்னர்களாக மாற்றி அவர்களுக்கும் சமுதாயத்தில் முக்கிய பங்களிக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு இந்த ‘நம்ம கபே’ உணவக கிளையை அவர்களுக்கு தந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விசயமாகும்.

தமிழகத்தில் இருக்கிற திருநங்கைகள் அனைவரும் இதுபோன்ற புதிய, புதிய உத்திகளுடன்கூடிய தொழில்முனைவோராக ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவை நல்கிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து இந்த நம்ம கபே கிளையை திறந்து வைப்பதிலே பெருமைக்கொள்கிறோம்.

முதல்வரின் தீவிர நடவடிக்கையினால், தமிழகத்தில் கரோனா தொற்றின் அளவு ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது. மிக விரைவில் பூஜ்ஜிய எண்ணிக்கையை அடையும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 92 சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 2வது தவணை தடுப்பூசியை 72 சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் 175 கோடி அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தைப் போல 10 கோடி அளவுக்கு வருகிற வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் சனிக்கிழமை 26ம் தேதி 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி 2 வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் செலுத்திக்கொள்ளலாம். தினந்தோறும் தடுப்பூசிகள் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி தமிழகத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்புடன் பல லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பல வகைகளில் உதவியாக இருந்தனர். அதுபோல் தற்போதும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் நிலுவையில் இருப்பதால், இலவச தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.”

இவ்வாறு மருத்துவத் துறை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.