உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்பொழுதே தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுக்கத் தொடங்கியுள்ளன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தின் முகமாக இருக்கும் பிரியங்கா காந்தி இன்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பிரியங்கா காந்தி இதுகுறித்து கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உ.பி.தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளோம். பெண்கள் பாதுகாப்பாக குரல் கொடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பெண்களை யாரும் பாதுகாப்பதில்லை. பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். இந்த முடிவுக்கு பின்னால் பெண்கள் பாதுகாப்பு என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த அரசியல் நோக்கமும், வேறு எந்த செயல்திட்டமும் இல்லை.
இந்த டிக்கெட்டுகள், சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் மட்டும் அல்ல, தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். இதற்கு பெண்கள் பெருமளவில் முன்வரவேண்டும்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களின் பாதுகாப்புக்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார் . மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பெண்களின் பாதுகாப்பை பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இடம் பெறும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
உ.பி.யில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் கூறி போலீஸாரே எரித்துக்கொன்றது நாட்டையே உலுக்கியது.
இதனை அடுத்து, பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.