செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் அந்த விண்கலத்தோடு பொறுத் தப்பட்டிருந்த ‘இன்ஜெனுயிட்டி’ என்ற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி யுள்ளதாக நேற்று நாசா அறிவித்தது.

இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டரை செவ்வாய்க் கிரகத்தில் ஏப்ரல் 11ம் தேதி பறக்கச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அந்தச் சோதனை வெற்றிப் பெற்றால் கிரகங்களை ஆய்வு செய்வதில் நாசா புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்று கூறப்படுகிறது. 471 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து செவ்வாய்க் கிரகத்தை அடைந்திருக்கும் இந்த ஹெலிகாப்டர், பூமிக்கு வெளியே வேறொரு கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் ஆகும்.

இந்த சிறியரக ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டது. பூமியுடன் ஒப்பிடும்போது செவ்வாய் கிரகத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே புவியீர்ப்பு விசை இருக்கும். அதேபோல் அதன் வளிமண்டல அடர்த்தி பூமியின் வளிமண்டல அடர்த்தியில் ஒரு சதவீதம்தான். செவ்வாய்க் கிரகத்தில் தட்பவெப்பநிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 90 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இதனால் எலக்ட்ரானிக் பொருட்கள் உடையவும், உறையவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்தக் ஹெலிகாப்டரில் உட்புற ஹீட்டர் பொருந்தப் பட்டுள்ளது.

இந்தக் ஹீட்டர் ஹெலிகாப்டரின் மூடப்படாத பகுதிகளை குளிரிலிருந்து பாதுகாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெலிகாப்டரை ஐந்து முறை பறக்கச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. முதலில் ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் என்று பத்து மீட்டர் உயரம் வரைச் செல்லும். அங்கே 30 வினாடிகளுக்கு சுழலும்.அதன் பிறகு தரைப் பரப்பை நோக்கி இறங்கும். 85 மில்லியன் டாலர் செலவிட்டு நாசா இந்த ஹெலிகாப்டரை உருவாக்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.