அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை மிக மோசமாக உள்ளதால் அங்குள்ள மக்கள் இந்த பூகம்பத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை கவலையுடன் ஒப்புக் கொண்டுள்ள ஐ.நா. சபை, இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு 70 ஆயிரத்தையும் கூட கடக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் துருக்கியில் நேற்றைய தினம் (ஞாயிறு) கர்ப்பிணிப் பெண், சிறு குழந்தைகள் எனப் பலரும் 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல மக்களின் துக்கம் அரசின் மீதான கோபமாக ஆவேசமாக மாறி வருகிறது. சிரியாவிலும் இதே நிலை தான் நிலவுகிறது.

ஏங்கும் சிரியா: சிரியாவின் வடமேற்குப் பகுதிக்கு ஐ.நா. குழு ஒன்று நிவாரணப் பொருட்களை அனுப்பியது. துருக்கி வழியாக சிரியாவை இந்த நிவாரணப் பொருட்கள் அடைந்தது. ஆனால் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பல ஆண்டுகளாகவே சிரியாவின் சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளும் அளவிற்கு அதன் சுகாதார கட்டமைப்பு இல்லை. இது ஒருபுறமிருக்க சிரியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உள்நாட்டுப் போர், பொருளாதாரத் தடைகள், பூகம்பம் என்று அடுக்கடுக்கான துயரங்களால் சிரிய மக்கள் வேதனையில் வெந்து இப்போது வெகுண்டெழுந்துள்ளனர். பெருந்துயருக்கு இடையே தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் குமுறுகின்றனர்.

பாப் அல் ஹவா எல்லை வழியாக வடமேற்கு சிரியாவிற்கு 10 டிரக்குகளில் ப்ளாஸ்டிக் ஷீட்டுகள், கயிறுகள், ஸ்க்ரூ, ஆணி, போர்வை, மெத்தை, விரிப்புகள் போன்ற தற்காலிக கூடாரங்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இவை மட்டும் போதாது எனக் கூறுகின்றனர் களப் பணியாளர்கள். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அங்கு தரைமட்டமாகியுள்ளன. முன்னதாக நேற்று சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பல மில்லியன் டாலர் நிதியும், நிவாரணப் பொருட்களும் அறிவித்துள்ளது. இதற்காக யுஏஇ அரசுக்கு அதிபர் அசாத் நன்றி தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு உலக நாடுகள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்பது தான் அந்நாட்டு மக்களின் ஏக்கமாகவும் ஐ.நா.வின் வலியுறுத்தலாகவும் உள்ளது. #SyriaNeedsHelp என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

சிரியாவுக்கு நேரடியாகச் சென்ற உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேஸஸ், “சிரியாவில் உள்நாட்டுப் போர், கரோனா பாதிப்பு, காலரா, பொருளாதார நெருக்கடியுடன் இப்போது இந்த பூகம்பமும் சேர்ந்துள்ளது. சிரியா மீண்டெழ இன்னும் அதிகமான உதவிகள் தேவை” என்றார். இவை ஒருபுறம் இருக்க துருக்கி, சிரியாவில் சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் போதிய போஷாக்கான சூடான உணவிற்காக காத்திருக்கின்றனர் என்ற வேதனைப் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.