பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறையில் வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக அந்நாட்டில் கடந்த 20 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பத்து நாட்களாக போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோனுக்கு இந்தப் போராட்டம் பெரிய சவாலாக மாறியுள்ளது. கிழக்கு பாரீஸ் ரயில் நிலையம் மற்றும் வங்கிகளில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த வியாழன் அன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் சுமார் 13,000 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாரீஸ் விதிகளில் போராட்டக்காரர்கள் பேரணி செல்வதால் பதற்றமான சூழலே நிலவுகிறது.

பேச்சுவார்த்தை: பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எலிசி அரண்மனையில் பிரதமர் எலிசபெத் போர்ன், அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி போராட்டக்காரர்களுடனும், எதிர்க்கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.