இந்தியாவில் கரோனா வைரஸின் 3-வது அலை பிப்ரவரி மாதத்தில் உச்சமடையும், தினசரி 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் 3-வது அலை தொடங்கி விட்டது. கடந்த வாரம் வரை ஆயிரக்கணக்கில் பாதிப்பு இருந்த நிலையில் இந்த வாரத்தில் லட்சக்கணக்காக மாறிவிட்டது. அடுத்துவரும் நாட்களில் இந்த பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

ஆனால், ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோருக்கு லேசானபாதிப்புதான் இருக்கும் என்று கூறப்படுகிறது, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டதாலும், ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு அதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுவிட்டதாலும் 3-வது அலையில் நோய் தொற்றுக்கு ஆளாகினாலும் பெரிய பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புக் குறைவு எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஐஹெச்எம்இ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மெட்ரிக் சயின்ஸ் துறையின் தலைவரும் மருத்துவரான கிறிஸ்டோபர் முர்ரே அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள மக்கள் கரோனா 3-வது அலைக்குள் நுழைந்துவிட்டார்கள், உலகின் பலநாடுகளும் 3-வது அலையில் இருக்கின்றன. இந்தியாவில் 3-வது அலை விரைவில் உச்சமடையும், கடந்த ஆண்டு டெல்டா அலையில் இருந்ததைப் போன்று பாதிப்புகள் தீவிரமடையும்.

ஆனால், டெல்டாவோடு ஒப்பிடுகையில் ஒமைக்ரானால் பாதிப்பு குறைவு. கரோனா 3-வது அலை பிப்ரவரி மாதத்தில் உச்சமடையும்போது தினசரி 5 லட்சம் பேர் வரைகூட பாதிக்கப்படலாம். பல்வேறு மாடல்கள் இருக்கின்றன, அந்த மாடல்களை விரைவில் வெளியிடுவோம்.

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை அங்கிருக்கும் மக்கள் டெல்டா, பீட்டா வைரஸால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர், தடுப்பூசியும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளித்தது. இதனால் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும்போது மருத்துவமனையில் அனுமதி, உயிரிழப்பு குறைந்தது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், உயிரிழப்பு போன்றவை டெல்டாவை விட குறைவாக இருக்கும்

ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லை, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம், ஆனால், உயிரிழப்பு என்பது குறைவுதான். டெல்டா அலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் கால்பங்குதான் ஒமைக்ரானில் சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உயிரிழப்பும் குறைவாக இருக்கும்.

ஒமைக்ரான் அடுத்த உருமாற்றத்தை அடையுமா என்பது தெரியாது. ஆனால், உருமாற்றம் அடைய வாய்ப்பில்லை என்றும் கூற முடியாது. வைரஸ் அதிக வலுவாக இருந்தால், உருமாற்றம் நடக்கும். ஒமைக்ரான் வேகமாகப் பரவும்போது, வேறு உருமாற்றம் அடைந்து, அது கலந்துவிட்டால் அது கடினமாகிவிடும்.

வைரஸில் ஒரு உருமாற்றம் அடைய 30 முதல் 45 நாட்களாகும். உருமாற்றம் அடைய வைரஸ் சில காலம் எடுத்துக்கொள்ளும். ஒமைக்ரான் 90 முதல் 95 சதவீதம் வரை பாதிப்பு குறைவானது, ஆனால், சில குறிப்பிட்ட பிரிவினர், முதியோர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்தாலும் அதன் வேகம் குறைவாக இருக்கும்

இவ்வாறு கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்தார்