பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மும்பையில் 17.90 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர அபார்ட்மென்டை வாங்கியுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியான படம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ.300 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்தப்படத்தின் வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மும்பையில் ஆடம்பர அபார்மென்ட் ஒன்றை ரூ.17.90 கோடியில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த அபார்மென்ட் தொடர்பான அந்த தகவலை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அக்னிஹோத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர், “புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியதாகவும், ஆடம்பர பர்னிச்சர்களை வாங்கியதாகவும் தினமும் செய்திகள் பரப்பிவரும் காங்கிரஸ்காரர்களுக்கும், ஆம்ஆத்மிகாரர்களுக்கும் வேலையில்லாத பாலிவுட் நடிகர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 10 ஜன்பத்த்திலிருந்து (சோனியாகாந்தி வீடு) வந்த சோஃபாவை நான் விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.