2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை 463ஐ உறுதிசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள  முதுநிலை கலந்தாய்வு குறித்த கையேட்டில   தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய கூட்டாகும் 50 சதவீத இடங்கள் மாநில அரசுக்கும் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2016-17 கல்வியாண்டு வரை மாநில அரசுக்கான கோட்டாவில் உள்ள இடங்களுக்கு மாநில அரசு தனியாக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை கொண்டிருந்தது. அதில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

2017 -18 கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் மாநில அரசின் கீழ் இருக்கும் 50 சதவீத இடங்களுக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது இதில் அரசு மருத்துவர்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசு மருத்துவ சங்கங்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை 463 வெளியிடப்பட்டது. அதன்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு மருத்துவம் மேற்படிப்புக்கான கலந்தாய்வு எதுவும் நடைபெறவில்லை.

தற்போது 2022-ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு குறித்த கையேட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை உறுதி செய்யப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற பல் மருத்துவ மேற்படிப்புக்கான் சேர்க்கையிலும் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனவே எம்.டி. எம்.எஸ் உள்ளிட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.