குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு 6,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சுருளக்கோட்டில் 72 மி.மீ. மழை பெய்தது. பெருஞ்சாணியில் 71, களியலில் 54, பேச்சிப்பாறையில் 65, புத்தன் அணையில் 68, சிவலோகத்தில் 57, சிற்றாறு ஒன்றில் 45, களியலில் 54, கன்னிமாரில் 46, மயிலாடியில் 24, பாலமோரில் 47, ஆரல்வாய்மொழியில் 57, முள்ளங்கினாவிளையில் 32, முக்கடல் அணையில் 27, கோழிப்போர்விளை, குருந்தன்கோட்டில் தலா 15 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் ஏற்கெனவே நிரம்பி வழியும் நிலையில் அணைப் பகுதிகளைப் பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவு பொறியாளர் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு இன்று நீர்வரத்து அதிகமாக வந்தது. பேச்சிப்பாறை அணை 45 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 3,400 கன அடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக வந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1500 கன அடியும், சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.66 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1200 கன அடியும் தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. 3 அணைகளிலும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.

இதனால் வெள்ள அபாய நிலை நீடிக்கிறது. எந்நேரத்தில் மழை அதிகரித்தாலும் அதிக கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் சூழல் உள்ளதால் பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவு பொறியாளர்கள் குழுவினர் அணைப் பகுதிகளில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து 2,850 கன அடி தண்ணீர் உபரி நீருடன் மொத்தம் 3,100 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றில் 1,068 கன அடி உபரி நீருடன் 1,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு இரண்டு அணையில் இருந்து 336 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து மொத்தம் 4,600 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறி வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆபத்தான நிலையில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியது. மழை நீருடன் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.