14 நாளில் 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி சாதனை செய்த சிறுவன் சர்வேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாம்பரம் – சாய்ராம் பள்ளி மாணவர் மாஸ்டர் சர்வேஷ். இவர் ஐக்கிய நாடுகளின் எஸ்.டி.ஜி. உலகளாவிய இலக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2.10.2021 அன்று கன்னியாகுமரி, வள்ளுவர் சிலை அருகிலிருந்து மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். இதற்காக அம்மாணவனைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று புத்தகம் வழங்கினார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, என்.எழிலன், சாய்ராம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் அம்மாணவனின் பெற்றோர் கலந்துகொண்டனர்.