இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அகதிகளாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்யும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இலங்கையை சேர்ந்த 2 குடும்பத்தினர் இன்று கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்தனர். யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை சேர்ந்த லவேந்திரன் (வயது 24), சசிகலா (வயது 24), செல்வராஜா விஜயேந்திரன் (வயது 33), கமலராணி (வயது 42), ஜங்கரன் (வயது 19), ஸ்ரீராம் (வயது 14), நிலானி (வயது 9), கதிர் (வயது 2) ஆகிய 8 பேர் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை பகுதிக்கு கடல்வாழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த தனுஷ்கோடியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை அகதிகள் குறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். இதுவரை இலங்கையில் இருந்து அகதிகளாக 28 குடும்பத்தை சேர்ந்த 105 பேர் தமிழகம் வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடையே, இலங்கையில் இருந்து தப்பி வந்த லவேந்திரன் கூறும்போது, இலங்கையில் தற்போது வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் , வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காத நிலையில், பசியால் மடிந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும் ஒரு டீயின் விலை 180 ரூபாய்க்கும், அரசி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

 

புதிய‌பிரதமர் பதவியேற்றும் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்த அவர், வேலையும், பணமும் இருந்தால் கூட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழல்தான் நிலவுகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
எதற்காக போராடினார்கள் என்று கூறினார்.