சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலின் நடன வடிவமைப்புக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ராஜமௌலி: பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மரணமடைந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மகதீரா’ படத்தில் அவரோடு பணியாற்றிய அனுபவம் மறக்கமுடியாதது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
சோனு சூட்: சிவசங்கர் மாஸ்டரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்தோம். ஆனால், கடவுள் வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். உங்களை எப்போதும் மிஸ் செய்வோம் மாஸ்டர் ஜி. சினிமா உங்களை எப்போதும் மிஸ் செய்யும்.
இவர்கள் தவிர சிரஞ்சீவி, லட்சுமி மஞ்சு, நவ்தீப், பாபா பாஸ்கர், சுதா சந்திரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.