2018-2019ஆம் ஆண்டிலிருந்து புதிதாக சிறுசேமிப்புக் கணக்கு தொடங்குவது குறைந்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துப் பேசியதாவது:
”நாட்டில் கடந்த 2018-19ஆம் ஆண்டிலிலிருந்து புதிதாக சிறுசேமிப்புக் கணக்கு தொடங்குவது குறைந்து வருகிறது. 2018-19ஆம் ஆண்டில் 4.66 கோடி புதிய சிறு சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
2019-20ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4.19 கோடியாகக் குறைந்தது. 2020-21ஆம் ஆண்டில் இது 4.11 கோடி சிறு சேமிப்புக் கணக்குகளாகக் குறைந்தது. மூத்த குடிமக்கள் தொடங்கும் சிறுசேமிப்புக் கணக்குகளும் குறைந்து வருகின்றன.
முதியோருக்கான சிறுசேமிப்பு வங்கிக் கணக்கு கடந்த 2018-19ஆம் ஆண்டில் 12.6 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. இது 2019-20ஆம் ஆண்டில் 12.20 லட்சமாகக் குறைந்தது. 2020-21ஆம் ஆண்டில் அது மேலும் 11.40 லட்சம் கணக்காகக் குறைந்தது.
தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஒட்டுமொத்தமாக புதிதாக 2.33 கோடி சிறுசேமிப்புக் கணக்குகள்தான் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட 12 சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இதற்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது”.
இவ்வாறு சவுத்ரி தெரிவித்தார்.