தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்றாலத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட்5 முதல் 12-ம் தேதி வரை 8 நாட்கள் சாரல் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் 5 முதல் 14-ம் தேதிவரை புத்தகத் திருவிழாவும் நடத்தப்படுகிறது.

குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் விழாவை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். சாரல் விழாவைபிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 அரங்கு கள் அமைக்கப்படுகின்றன.

காலை முதல் மதியம் வரை பல்வேறு போட்டிகளும், மாலை முதல்இரவு வரை கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும்.

சாரல் விழாவில் பழங்கள், காய்கறிகள் கண்காட்சி, நீச்சல் போட்டி, படகு போட்டி,பழங்கால கார்கள் கண்காட்சி, கொழுகொழு குழந்தைகள் போட்டி உள்ளிட்ட வழக்கமாக நடத்தப்படும் போட்டிகள் உட்பட கூடுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, அவரது ஏற்பாட்டில் வலுதூக்கும் போட்டி நடத்த ஆர்வமாக உள்ளார்.

புத்தகக் கண்காட்சி குற்றாலம் பராசக்தி கல்லூரி உள் அரங்கத்தில் நடைபெறும். இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும். புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்படும். குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.