கரோனா வைரஸை எதிர்ப்பதற் காக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 9 மாதங்கள் கழித்து 3-வது டோஸ் போடப்படும் என்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அதே மருந்து செலுத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி 2 தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் (3-வது தவணை) வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு, ஏற்கெனவே எந்த வகை தடுப்பூசியை போட்டிருக்கிறார்களோ அதே கரோனா தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று மத்தியசுகாதாரத் துறை நேற்று அறிவுறுத்தி உள்ளது.

கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல்2 தவணைகளாக போட்டவர்களுக்கு அதே வகை தடுப்பூசி,பூஸ்டர் டோஸுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மேலும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 முதல் 12 மாதங்கள் கடந்த பின், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.