“நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலான நிலக்கரி ஒதுக்கப்படுகிறது” என்று, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்வதற்கு தவறியுள்ளது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு கழிந்தும்கூட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்றார்கள். ஆனால், அது பற்றி எந்த இடத்திலும் வாய் திறப்பதில்லை.
திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் பல கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் தனித்தனி மயானங்கள் உள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசாக உள்ளது. ஏழை மக்கள் மீது நூறு சதவீதத்துக்கும் அதிகமான வரி உயர்வை திணித்துள்ளனர்.
நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்பதைவிட கூடுதலான நிலக்கரியை கொடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரை சர்வதேச நிலைக்கு ஏற்ப ஏற்றம், இறக்கமாக உள்ளது. அரசின் மானியம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.