தூங்கும் வசதி கொண்ட 100 ‘வந்தேபாரத்’ ரயில்களை (160 பெட்டிகள்) தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் மூலமாகத் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த ரயில்களை தயாரிக்க, உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎஃப்-க்கு ஆர்டர் வழங்காமல், தனியாருக்கு வழங்கப்பட உள்ளதால், சென்னை ஐசிஎஃப். தொழிற்சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற தொழிற்சாலை
உலகப் புகழ்பெற்ற ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ரயில்-18 என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது.
மணிக்கு180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, ‘வந்தே பாரத் விரைவு ரயில்’ என்று பெயரிட்டு, புதுடெல்லி – வாரணாசி இடையேயும், புதுடெல்லி – காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், 2022-23-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை இந்திய ரயில்வே தொடங் கியது. தற்போது, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணி இறுதி நிலையில் உள்ளது.
இதில், 4-வது தலைமுறையான 200 ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆகஸ்ட்டில் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயில்களின் 2 முன்மாதிரிகளை இந்திய ரயில்வே குழு ஆய்வு செய்தவுடன், 4-வது தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
100 ‘வந்தே பாரத்’ ரயில்கள்
இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட 100 ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தயாரிக்க ரயில்வே வாரியம் கடந்த 4-ம் தேதி புதிய ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது. சதாப்தி ரயில் போல, தூங்கும் வசதி பெட்டிகளுடன் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படவுள்ளது.
மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்களை ஹரியாணாவில் உள்ள சோனிபத் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இங்கு ரயில் பெட்டி தயாரிப்பு பணியில் தனியார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த ஒப்பந்தப்புள்ளி வாயிலாக, தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘வந்தே பாரத்’ரயில்கள் தயாரிப்பு பணிகள் தொடங் கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சோனிபத் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். ரயில் பெட்டிகள் தயாரிக்கத் தேவையான இடம் அளிக்கப்படும். பணியாளர்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை நிறுவனங்கள் பெற்று தயாரிப்பு பணியில் ஈடுபடும்.
தயாரிப்பு காலம் 84 மாதங்கள். ஒப்பந்தம் செய்யும் நிறுவனம் பிணைத் தொகையாக ரூ.20 கோடி செலுத்த வேண்டும். நவம்பர் 10-ம் ஒப்பந்தம் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு
இதற்கிடையே, சென்னை ஐசிஎஃப்-க்கு‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்க ஆர்டர் வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க இருப்பது தொழிற்சங்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐசிஎஃப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் – சிஐடியு பொதுச் செயலாளர் பா.ராஜாராமன் கூறியதாவது:
ரூ.26 ஆயிரம் கோடியில் 200 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிப்புக்கான டெண்டர்கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில், ஐசிஎஃப்.-க்கு ஆர்டர் கொடுக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல, தற்போது அறிவிக்கப்பட்ட டெண்டரிலும் 100 ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்கும் ஆர்டர் ஐசிஎஃப்-க்கு வழங்கவில்லை.
ஐசிஎஃப்-ல் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஏற்கெனவே, ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரித்து வழங்கி உள்ளோம். எனவே, ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிப்பு தொடர்பான ஆர்டரை ஐசிஎஃப்-க்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 சதவீதம் செலவு அதிகம்
முதல், இரண்டாம் தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயில்களில் பயணிகள் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே இருந்தது. மூன்றாம், நான்காம் தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயில்கள் எல்லாம் தூங்கும் வசதி கொண்டதால், இரண்டாம் தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயிலை விட 15 முதல் 20 சதவீதம் செலவு அதிகமாக இருக்கும்.
இந்திய ரயில்வே இதுவரை 102 ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. இந்த ரயில்களை 2024-ம்ஆண்டு ஜூன் மாதத்துக்குள் தயாரித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட மேதா சர்வோ டிரைவ்ஸில் இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் தலா 16 பெட்டிகள் கொண்ட 6 இரண்டாம் தலைமுறை ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரித்து வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரயில்கள் தயாரித்து வழங்கும் பணி தொடங்கவுள்ளது.