கிராமப்புறங்களில் உள்ள திறமைகளைத் தேடி ஆதரவளிக்கும் வழக்கம் இன்றைய ட்விட்டர் உலகத்தில் அதிகம் வளம்வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் இப்பொது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமூக வலைதளத்தில் ஒரு சிறுவன் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்தும் காட்சி பரவலாக பேசப்பட்டு வந்தது. அதை ஒரு செய்தியாளர் ட்விட் செய்திருந்தார்.அவரது திறமையால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரீ-ட்வீட் செய்து பாராட்டினார்.
அது மட்டுமின்றி ராஜஸ்தான் முதல்வரிடம் அந்த சிறுவனுக்கு அவனது கனவை நனவாக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். அந்த சிறுவனுக்கு முறையான பயிற்சி அளிக்க முடியுமா என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை அந்த காணொளியில் கிரிக்கெட் விளையாடிய பாரத் சிங்கை சந்தித்தார்.
16 வயதான சிறுவன் பாரத் சிங் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் பந்து வீச்சின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். முறையான உபகரணங்களுடன் பயிற்சி செய்ய முடியாத பொருளாதார சூழலால் தன்னிடம் இருக்கும் பொருட்களை வைத்து தனது பவுலிங் திறமையை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
ஜெய்ப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் பாரத் சிங், முதல்வர் திரு கெலாட்டை சந்தித்தார்.மேலும் சிறுவனுக்கு சவாய் மான்சிங் (எஸ்எம்எஸ்) ஸ்டேடியத்தில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
கிரிக்கெட் அகாடமியில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களிடம் பாரத் சிங் பயிற்சி பெறுவார் என்றும். அரசின் சார்பில் அவருக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்றும் கெலாட் கூறினார்.