இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொத்துவரி தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-2023ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை 30.09.2022க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமிருந்து, வசூல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரியில் 5% அல்லது அதிகப்பட்சமாக ரூ.5000 வரை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சொத்து உரிமையாளர்கள் 2022-23ம் ஆண்டிற்கான தங்களின் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை 01.10.2022 முதல் செலுத்த வேண்டும். 01.10.2022 முதல் 10.10.2022 வரை 10 தினங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 4 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி ரூ.50.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சொத்து உரிமையாளர்கள் 15.10.2022க்குள் தங்களின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தி 5% ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.