சென்னை: மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறை தொடர்ந்து எடுத்து வருவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சென்னை சைக்ளிஸ்ட்ஸ் (Chennai cyclists) அமைப்பு நடத்தும் சென்னை மிதிவண்டி திருவிழாவில் “(CHENNAI CYCLING THIRUVIZHA)” முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் வசிக்கும் மக்கள் இங்கு வருகை தந்து சைக்கிள் திருவிழாவை பார்க்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்து சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
டிஐஜி தற்கொலை தொடர்பான கேள்விக்கு, “கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மன அழுத்தத்தில் இருந்ததை தெரிந்து முன்கூட்டியே அதற்கான சிகிச்சைகளை எடுத்துள்ள போதிலும் இதுபோன்று நடந்துள்ளது கவலை தருகிறது. காவல்துறையினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை காவல்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது. காவல் துறையை சார்ந்தவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மனநல பயிற்சியாளர்களாகவும் அவர்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள் மற்ற காவலர்களுக்கு மன அழுத்ததில் இருந்து விடுபடுவது குறித்த பயிற்சிகளை அளிக்கின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.