தமிழகத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கைத் தளர்வுகளுடன் நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், தொற்று எண்ணிக்கை அதிகரித்து 35,000-ஐத் தொற்று எண்ணிக்கை கடந்தது. சென்னையில் 6,000க்குமேல் தொற்று எண்ணிக்கை பதிவானது.
இதையடுத்து முழு ஊரடங்கு அமலானது, அதிலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் மே 24 முதல் முழு தளர்வுகளற்ற ஊரடங்கு அமலானது. இதனால் தொற்று எண்ணிக்கை லேசாகக் குறையத் தொடங்கியது. ஆனாலும், மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகளின் ஆலோசனைப்படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனால் கரோனா தொற்று எண்ணிக்கை 25,000க்கும் கீழாகக் குறைந்தது. சென்னையில் பெருமளவில் குறைந்து 2,400க்கும் கீழே சென்றது. தமிழகம் முழுவதும் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மாவட்ட அளவில் தொற்றுப் பரவல் குறையவில்லை. மேலும், 25,000 என்ற மொத்த தொற்று எண்ணிக்கை மேலும் குறையவேண்டும் என்பதால் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கின் நிலை, மாவட்டங்களில் ஊரடங்கு அமலவாது, சட்டம் ஒழுங்கு, நோய்த்தொற்றுப் பரவல், தடுப்பூசி, ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் வேகமாகக் குறைந்தாலும் சில மாவட்டங்களில் பரவல் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.