சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இப்படம் ரூ.75 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்தது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.