முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியின் ‘டி’ பிளாக்கில் எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் தங்கியிருந்தார்.
இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரது அறையில் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணையும் நடத்தினர்.
இதையறிந்து எம்எல்ஏ விடுதிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. வெங்கடேஷ்பாபு ஆகியோர் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே விடுவதற்கு போலீஸார் மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைய, அவரை போலீஸார் பிடித்து வெளியே அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அளித்த புகாரின்பேரில் ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு உட்பட 10 பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர் உத்தரவை மீறுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.