விவசாயிகளுக்கு எதிராக நடந்த லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும் சம்பவ இடத்துக்குச் செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது, விவசாயிகள் பெருமளவில் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டி வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் பெரும் ஆத்திரமடைந்த விவசாயிகள் போராட முற்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உ.பி. அரசின் காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கிற வகையிலும், இதில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரைக் காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற அவரைத் தடுத்தது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட பிரியங்கா காந்தி மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவி அவரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நடைபெறுகிற விவசாயிகள் போராட்டம் உத்தரப் பிரதேசத்தில் பரவியதைச் சகித்துக்கொள்ள முடியாத உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி, 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதை உணர்த்துகிற வகையில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் திரண்டெழுந்து எதிர்ப்பை த்தெரிவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் விரோதத்தைப் பெற்றுள்ள பாஜக ஆட்சி, வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை எவராலும் தடுக்க முடியாது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.