நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், கேள்வித்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 3,862 மையங்களில், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள் சேர்ந்து, சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் இளநிலைத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன, பலர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாகத் தேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறுகையில், “கடந்த 12-ம் தேதி நீட் தேர்வின்போது, ராஜஸ்தானில் தேர்வு எழுதிய மாணவர்களில் 8 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 18 வயதான மாணவி தினேஷ்வரி குமாரி, கண்காணிப்பாளர் ராம்சிங், தேர்வு மையப் பொறுப்பாளர் முகேஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சட்டவிரோதமாக ஆதாயம் அடைவது அநீதியாகும்.

ஆதலால், மத்திய கல்வித்துறை அமைச்சகம், தேசிய தேர்வு அமைப்பு, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தேர்வு நடத்துவதற்கான நிலையான வழிகாட்டி முறைகளை, பயோ- மெட்ரிக் முறையில் மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் முறையில் பரிசோதனை நடத்தி, ஜாமர்களைப் பயன்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

ஆதலால், முறைகேட்டுடன் நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வை நடத்த வேண்டும். அந்த மனுவை விசாரித்து தீர்வு காணும்வரை, நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.காவே அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நினாந்த் தியோரா ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு மனுதாரர் வழக்கறிஞரிடம் கூறுகையில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி 3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அரசியலமைப்பு உட்பிரிவு 32-ன் கீழ் என்ன மாதிரியான ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளீர்கள்.

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளார்கள். உங்களின் மனுதாரர் வந்து பேசும்போது நீங்கள் ஏதும் அறிவுரை கூறவில்லையா. இந்த மனுவைத் தள்ளுபடி செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறவில்லையா? ஒட்டுமொத்தத் தேர்வையும் நீங்கள் ரத்து செய்ய விரும்புகிறீர்கள்.

இதுதான் உங்கள் வாதம். இந்த விவகாரத்தையும், உங்களையும் தனியாகக் கவனிக்கிறோம். இந்த மனுவை விசாரிக்க முடியாது. தள்ளுபடிசெய்கிறோம்” எனத் தெரிவித்தது.

அப்போது வழக்கறிஞர் தியோரா கூறுகையில், “மனுதாரருக்கு 20 வயதுதான் ஆகிறது. அபராதம் விதிக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, ”மனுதாரருக்கு அறிவுரை வழங்காத காரணத்தால் இந்த அபராதத்தை வழக்கறிஞருக்குதான் விதிப்போம்” என்று தெரிவித்தது.

அதற்கு வழக்கறிஞர் தியோரோ, “எந்த விதமான அபராதமும் விதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, “சட்டப்பிரிவு 32-ன் கீழ் ரிட் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்பது குறித்து மனுதாரருக்கு ஏன் அறிவுரை வழங்கவில்லை. அபராதத்தை உங்களிடம்தான் வசூலிப்போம். இருப்பினும் இறுதி எச்சரிக்கையாக இதைக் கூறுகிறோம் இதுபோன்று 32-வது பிரிவில் ரிட்மனு தாக்கல் செய்யாதீர்கள் என எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்தது.