புதுச்சேரியில் கடும் மழைப் பொழிவு ஏற்படும் என்ற ரெட் அலர்ட்டால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
1 முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 8-ம் தேதி முதல் அரை நாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் நவம்பர் 8, 9-ம் தேதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் புதுச்சேரிக்கு விடப்பட்டுள்ளது. அதனால் விடுமுறை புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகளுக்கு) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது” என்று தெரிவித்தார்.