மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் பகுதியில் 3ஆம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதிகாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கிரேன் எந்திரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானேவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், திருவள்ளூரை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோரும் உயிரிழந்தனர். கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ் விபத்தில் உயிரிழந்ததாகவும், இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.