டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் பொதுமக்கள், போலீஸாரிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், அந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல் துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதையடுத்து குற்றச் செயல்களை முற்றிலும் குறைக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில் நேரில் பெற உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை டிஜிபி அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை முதல் கட்டமாக பெற்றுக் கொண்டார். நேற்று 2-வது நாளாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.

33 பொதுமக்களும், 10 போலீஸாரும் சங்கர் ஜிவாலிடம் நேரில் தங்களது மனுக்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அவற்றை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.