ஆற்காடு அடுத்த பெரியகுக்குண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுக்குண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்தமீரா தலைமை தாங்கினார். ஆற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரான திமுகவைச் சேர்ந்த சரஸ்வதியும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

இதில், கடந்தாண்டு அறிவித்த தீர்மானங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை, அதை முதலில் முடியுங்கள். இந்தாண்டு தீர்மானத்தை அப்புறம் நிறைவேற்றலாம் என ஊராட்சி மன்றதுணைத்தலைவரின் ஆதரவாளர் கள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். இதனால், ஆத்திரமடைந்த தலைவர் மீராவின் ஆதரவாளர்களும் பதிலுக்கு அவர்களுடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்தஆற்காடு கிராமிய காவல்துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.