மதுரை: மனிதர்களோடு பறவைகளின் சிநேகம் அலாதியானது. ஆதி காலத்தில் புறாக்களே தபால்காரர்களாக செய்திகளை சுமந்து சென்றுள்ளன. ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக் குருவியை போலே..’ என்ற மகாகவியின் வரிகள் விடுதலையின் அடையாளம் பறவைகள் என்பதை உணர்த்துகின்றன.

ஒரு பறவை இனம் அழிகிறதென்றால், அது மனித இனத்தின் அழிவுக்கு அச்சாரம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பறவைகள் உண்ணும் பழங்களையும், விதைகளையும் எச்சத்தின் மூலம் வேறிடத்துக்கு கொண்டு சென்று தாவர இனம் உயிர்ப்புடன் பிழைத்திருக்க வழி செய்கின்றன. அத்தகைய பறவைகள் வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டினாலும், கிளிகளை வளர்க்க வனத்துறை அனுமதி இல்லை.

இதனால், வெளிநாட்டு பறவைகள், லவ் பேர்ட்ஸ் வளர்த்தல் பிரபலமாகி வருகிறது. மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த மகபூப் பாஷா என்பவரின் மகன் அப்துல் அஜீஸ் அகமது (30), ஒரு ஏக்கரில் பண்ணை அமைத்து வெளிநாட்டுப் பறவைகளை பராமரித்து வருகிறார்.

இது குறித்து அப்துல் அஜீஸ் அகமது கூறியதாவது: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்.சி நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் படித்தேன். பறவைகள் ஆர்வலரான எனது தந்தை மகபூப் பாஷாவிடம் இருந்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் தந்தைக்கு உதவியாக தொடங்கிய பறவைகள் மீதான நேசம் காதலாக மாறியது.

 

அரியவகை பறவையினங்கள், அழியும் நிலையிலுள்ள பறவையினங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். இந்தியாவிலுள்ள கிளிகள் மற்றும் பறவைகளை வளர்க்க இந்திய வனத்தடுப்பு சட்டப்படி அனுமதி இல்லை. எனவே வெளிநாட்டு பறவைகள் கிளிகள், பறவைகள் மீது எனது ஆர்வம் திரும்பியது. முதலில் வீடுகளில் இவற்றை வளர்க்கத் தொடங்கினேன். இடப்பற்றாக்குறையாலும், இயற்கையோடு இணைந்தவாறு இருக்கும் வகையில் வேம்பரளி அருகே லிங்கவாடியில் 1 ஏக்கரில் தற்போது பண்ணை அமைத்துள்ளேன்.

இங்கு ஆப்பிரிக்க நாட்டின் கிளிகள், ஆஸ்திரேலியா கிளிகள், இந்தோனேசியா பறவைகள், வட அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் என 90 வகை பறவையினங்கள், 300-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. மேலும், அரிதான மிகவும் சிறிய வகை ஆப்பிரிக்க பென்னக் பாக்ஸ் என்றழைக்கப்படும் குள்ளமான நரிகள், மிக அரிதான காட்டன் டாப் டேமரின் என்றழைக்கப்படும் குரங்கு வகைகள் உள்ளன. இவை அனைத்தும் செல்லப் பிராணிகள் ஆகும்.

 

கிளிகள் வகைகளில் ஓஸ்மேரி எக்லக்டஸ், கிரீன் விங் மக்கவ், புஃபன்ஸ் மக்கவ், சன் கன்னுர், கிரேட்டர் சல்பர் கிரஸ்டடு காக்கடூ, எல்லோ காலர்டு மக்கவ், ஆப்பிரிக்கன் கிரே பேரேட், ஃபின்ச்சஸ், காட்டன் டாப் டேமரின், டபுள் எல்லோ ஹெட்டட் அமேசன், காலா காக்கடூ, சேனல் பில்டு டூக்கன், கிரீன் அரக்கரி, கயஷிந்த் மக்கவ் ஆகிய பறவையினங்கள் உள்ளன.

 

இந்தியாவில் பண்ணைகள் அமைத்து பறவைகள் வளர்ப்பதன் மூலம் அழியும் நிலையிலுள்ள பறவையினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அழகுப் பறவைகள் வளர்க்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமும், மாநில அரசின் விலங்குகள் நலவாரியத்திடமும் அனுமதி பெறவேண்டி உள்ளது.

இதில் 2 ஆண்டுகளுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். 2 பறவைகள் வளர்க்க விரும்புவோரும் அதே கட்டணம் செலுத்தினால்தான் அனுமதி. இது மிகவும் சிரமம். எனவே வீடுகளில் பறவைகளை பாதுகாப்பாக வளர்க்க மத்திய, மாநில அரசுகள் விதிகளை எளிமையாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.