கே.எல்.ராகுலின் ஆர்ப்பரிப்பான சதம், ரோஹித் சர்மாவின் பொறுமையான ஆட்டம் ஆகியவற்றால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.
2-வது டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. ரிஷப்பந்த், ஜடேஜா, இருவரும் இருப்பதால், இன்னும் தாராளமான 150 ரன்கள் சேர்த்தாலே இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி தரக்கூடிய ஸ்கோராக மாறக்கூடும். ஆதலால், 2-வது டெஸ்டில் இந்திய அணி “சிட் ஆன் தி டிரைவர் சீட்” எனும் கட்டத்தில் இருக்கிறது.
முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா 126 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர், 3-வது விக்கெட்டுக்கு ராகுல், கோலி கூட்டணி117 ரன்கள் சேர்த்தனர். இருவருடனும் ராகுல் நன்கு பாட்னர்ஷிப் அமைத்தார்.
69 ஆண்டுகளுக்குப்பின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.இதற்கு முன் கடந்த 1952-ம் ஆண்டு வினு மண்கட், பங்கஜ் ராய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்திருந்தனர்.அதன்பின் பலமுறை இந்திய அணி இங்கிலாந்து பயணத்தில் லண்டனில் விளையாடியபோதிலும், தொடக்க ஜோடி சதம் கண்டதில்லை. 69 ஆண்டுகளுக்குப்பின் ராகுல், ரோஹித் சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற அணி, எதிரணியை பேட்டிங் செய்யக் கேட்டுக்கொண்டு அந்த அணியில் தொடக்க ஜோடி அடித்த அடித்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், அலிஸ்டார் குக் ஜோடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 114 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம் அதை ரோஹித், ராகுல் முறியடித்துவிட்டனர்.
டிரன்ட் பிரிட்ஜ் ஆடுகளத்தைவிட லார்ட்ஸ் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவுக்கு ஒத்துழைக்கிறது என்று குறிப்பிட்டாலும், இந்திய அணி பந்துவீசும்போதுதான் அது முழுமையாகத் தெரியவரும்.
கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் 2-வது முறையாக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் சதம் அடித்ததற்கு பின் தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து தனது பெயரை இங்கு பதிவு செய்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த வீரர்களின் பெயர் அங்குள்ள பெயர் பலகையில் பொறிக்கப்படும், அந்த வகையில் ராகுலின் பெயரும் அதில் விரைவில் பதிவாகும்.
ராகுலின் ஆட்டம் நேற்று பார்க்கவே அற்புதமாக இருந்தது. தொடக்கத்தில் ராகுல் நிதானம் காட்டினார், 100 பந்துகளைச் சந்தித்த ராகுல் 20 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ரோஹித் சர்மா அடித்து ஆடினார்.
அதன்பின் ராகுல் ஃபார்முக்குத் திரும்பியன் ஸ்கோர் உயரத் தொடங்கியது. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு முன்பாக திடீரென மொயின் அலி பந்தில் ஒரு சிக்ஸர், ஆன்டர்ஸன் பந்தில் கவர் டிரைவில் சில பவுண்டரிகள் அடித்து ராகுல் அசத்தினார்.
மறுபுறம் ரோஹித் சர்மா தனது வழக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சாம் கரன் பந்துக்கு தொடக்கத்தில் திணறிய ரோஹித் சர்மா அதன்பின் சுதாதிரத்தார். டி20 பந்துவீச்சாளர்தானே என்ற கரனிடம் கேட்கும் விதத்தில் 15-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி கரனுக்கு ரோஹித் பதிலடி கொடுத்தார். 83 பந்துகளில் ரோஹித் அரைசதம் அடித்தார்.
பொறுமையாக ஆடிய ரோஹித் சர்மா 83 ரன்னில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். Sena நாடுகள் என அழைக்கப்படும் தென்ஆப்பிரி்க்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் சர்மா டெஸ்டில் சதம் அடித்தது இல்லை, இந்த முறை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆன்டர்ஸனின் மாயாஜ ஸ்பெலில் விக்கெட்டை பறிகொடுத்தார். வெளிநாடுகளி்ல் ரோஹி்த் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 83 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த புஜாரா 9 ரன்னில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
3-வது விக்கெட்டக்கு வந்த கோலி, ராகுலுடன் சேர்ந்தார். கோலி களமிறங்கியவுடன், அவரின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த முறையும் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் வி்க்கெட்டை பறிகொடுப்பாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால், அனைத்தும் பதில் அளிக்கும் கோலி மிகுந்த கவனமாக பேட்டை சுழற்றினார். ஆன்டர்ஸன் பந்துவீச்சில் தனது வழக்கமான சில கவர் டிரைவ் ஷாட்களை ஆடி கோலி பதிலடி கொடுத்தார்.
ராகுல் 137 பந்துகளில் அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளயின்போது இந்திய 224 ரன்களுடன் வலுவாக இருந்தது.
அதன்பின் புதிய பந்து எடுத்தபின், ராபின்ஸனும், ஆன்டர்ஸனும் சிறிது நெருக்கடி அளித்தனர். ராகுல் 212 பந்துகளில் சதம் அடித்தார். நிதானமாக ஆடிய கோலி 42 பந்துகளில் ராபின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆன்டர்ஸன், ராபின்ஸன் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். ஆனால் பிராடுக்கு பதிலாகக் கொண்டுவரப்பட்ட மார்க் உட் பந்துவீச்சில் வேகம் மட்டுமே இருக்கிறது, ஸ்விங் இல்லை, துல்லியம் இல்லை இதனால் பேட்மேன்கள் சில ஓவர்கள் மார்ட்உட் பந்தை கணித்துவிட்டாலே அடுத்து அடிவாங்கிவிடுவார். சாம் கரன் 20 ஓவர்கள் வரை வீசும் அளவுக்கு அவரின் பந்துவீச்சில் துல்லியம் இல்லை. அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில்கூட 10 ஓவர்களுக்கு மேல் கரன் வீசினாலே ரன்களை வாரி வழங்கும் அளவில்தான் பந்துவீச்சின் தரம் இருக்கிறது.
ஆன்டர்ஸன் இரு விதமான இன்ஸ்விங்குகளை வீசுகிறார். தனது கைமணிக்கட்டை இரு விதங்களில் மாற்றி வீசும் ஸ்விங்கால் பந்து காற்றில் அசைந்தாடி பேட்ஸ்மேன்களை குழப்பி விடுகிறது. அந்தவகையில்தான் ரோஹித் சர்மா நேற்று வி்க்கெட்டை இழந்தார். மற்றொருவிதம் விரல்களுக்கு நடுவே பந்தை வைத்துக் கொண்டு ஸ்விங் செய்யும்போது பந்து எந்த தசையில் திரும்பு எனத் தெரியாமல் பேட்ஸ்மேனை குழப்பும் வகையில் வீசும் ஆன்டர்ஸன் அனுபவம்தனி.