மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை முன்வைக்க மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டு இந்த வழக்குகளின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேற்கொண்ட எந்தத் தரப்பிற்கும், எந்தக் காரணத்திற்காகவும் அவகாசம் வழங்கப்படாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.