பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து, கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் உட்பட 1.26 லட்சம் பேருக்கு கரோனா (கோவாக்சின்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்தப் பணியை புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜன.3) தொடக்கிவைத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் உட்பட 1.26 லட்சம் பேருக்கு கரோனா (கோவாக்சின்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆக்சிஜன் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்ளன. அதேபோல், அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டாலும் உரிய சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன.
மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் நாளை (ஜன.4) பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. தற்போது உள்ள காவிரிப் பாலத்துக்கு அருகிலேயே ரூ.90 கோடியில் புதிய பாலம் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரையில் பணிகள் தொடங்கும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.