தமிழ்நாடு மற்றும் வெளிநாடு பதிப்பகத்தினரிடையே 365 நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை பார்வையிட்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடு பதிப்பகத்தினரிடையே 365 நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவத்துறை சார்ந்த 5 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை மருத்துவ மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஜப்பான் நாட்டினுடைய துணை தூதர் டாகா மசாயூகி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி, பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள், புத்தக பதிப்பாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜனவரி 6ம் தேதி 46வது சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தேன். அதேபோல், இந்த 46 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாக தொடங்கப்பட்டது தான் பன்னாட்டு புத்தகக் காட்சி. இந்த புத்தகக் காட்சியானது மகாகவியின் கனவை நிறைவேற்றும் வகையில் நடைபெற்று வருகிறது. மேலும், பதிப்புத்துறை பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், எங்கெல்ஸ், லெனின், அம்பேத்கார் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்தவகையில், முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சியாக இந்தப் பன்னாட்டு புத்தகக் காட்சி உள்ளது. இதில், தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும்போது பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடத்துவது ஒன்றும் வியப்பல்ல. இருப்பினும், தமிழ்ப் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அதேபோல், தந்தை பெரியார் ஓர் உலகத் தலைவர். அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை. உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அத்தகைய பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளையும், இந்திய மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டக்கூடிய வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியை சென்னையில் தொடங்கி இருக்கிறோம். உலகளாவிய அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் இது போன்ற புத்தகக் காட்சி சென்னையில் தொடங்கி இருக்கிறது. இதனை ஆண்டுதோறும் நடத்தி, மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதைப் பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.
இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், அஜர்பைஜான், இஸ்ரேல், உகாண்டா, அர்மேனியா, அர்ஜென்டினா, கனடா, துருக்கி, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அனைவரையும் தமிழ்நாட்டு முதல்வர் என்ற முறையில் வரவேற்கிறேன்.
பன்னாட்டு பதிப்பாளர்கள் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் வணிகத் தொடர்புகளை வைக்லாம். தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்க விரும்புகிறேன். முதன்முறையாக நடந்து முடிந்த இந்த பன்னாட்டு புத்தக் காட்சி மூலம் தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
மேலும், சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கடந்த 16ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல நாட்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக தமிழ்நாடு அரசு செய்யும். இந்த ஆண்டு நடைபெறும் இந்த காட்சிக்காக 6 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. அறிவுச் சக்தியை உருவாக்குவது என்பதை ஆக்கபூர்வமான முதலீடாகவே நினைக்கிறோம். இதனை அறிவுலகத் தொண்டாகக் கருதி செய்து வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசு தனது கடமையாகக் கருதுகிறது.