சென்னை: சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள கருணாநிதி சிலை திங்கள்கிழமை சென்னை வந்தது. இந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிலை அமைக்க பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ரூ.1.56 கோடி செலவில் இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கருணாநிதி சிலை சென்னை வந்து சேர்ந்தது. வரும் 28-ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு இந்த சிலையைத் திறந்து வைக்கிறார்.