அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் தேர்தல், இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில் இத்தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.
இத்தகைய சூழலில், தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.