‘துணிவு’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘அசல்’ பட இசைவெளியீட்டு விழா நிகழ்வில் நடிகர் அஜித் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.