சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் மெய் நிகர் முறையில் உலக புராதன சின்னங்களைச் சுற்றுலாத் துறை காட்சிப்படுத்தி வருகிறது. இதைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 70நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை அரங்கில் மெய் நிகர் முறையில் (விர்சுவல் ரியாலிட்டி) யுனெஸ்கோவால் உலக புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் இந்தியாவில் அதிக அளவில் பார்க்கப்படும் முதன்மை சுற்றுலாதலமாகத் திகழும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரயில், தாராசுரம் கோயில் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகள் நவீனபிரத்யேக கருவியின் மூலம், பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புக் கருவியில் சம்பந்தப்பட்ட இடங்கள் 360 டிகிரி கோணத்தில், அதாவது தலைக்கு மேல், பின்புறம், இடது, வலது, பொதுமக்கள் நிற்கும் இடத்துக்கு கீழே என தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் அதைப் பார்வையிட ஆரம்பித்த சில விநாடிகளில் அந்தசுற்றுலாத் தலத்திற்கே, சென்று அவற்றை நேரில் காண்பது போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகின்றது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. நேரில் காண்பதுபோன்ற அனுபவத்தைப் பொருட்காட்சி மூலமாகவழங்கிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.